ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ளஆரம்பித்தார்களாம். இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். “இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை...

2016-11-04 09:49:58 by Sanju

குரு பக்தி
--------------

துரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் குருவாக இருந்தார். அவர்களுக்கு வில் வித்தை யை சிறப்பாகக் கற்பித்து வந்தார். வில் வித்தையில் அர்ஜுனனை விடச் சிறந்தவர் எவருமில்லை எனக்கூறும்படி செய்வதாகச் சபதம் செய்திருந்தார். இதனால் துரியோதனனுக்குக் கோபமும் பொறாமையும் அர்ஜுனன் மீது ஏற்பட்டிருந்தது. இயல்பாகவே அர்ஜுனன் வில்லில் அம்பை ஏற்றி எய்வதில் மிகவும் சிறந்தவன். அதனால் துரோணர் அர்ஜுனனிடம் தனி அன்பு கொண்டிருந்தார்.

ஒரு நாள் துரோணர் தன் மாணவர்களுக்காகக் காத்திருந்தார். அப்போது ஓர் ஏழைச்சிறுவன் வந்து துரோணரைப் பணிந்து நின்றான்.
அவனை ஆசிர்வதித்தார் துரோணர்.
"யாரப்பா நீ? எங்கு வந்தாய்?"

"குருவே!, நான் தங்களிடம் வில் வித்தை பயிலவேண்டும் என விரும்புகிறேன். பலநாட்களாகத் தங்களைத் தேடித் திரிந்தேன். இன்றுதான் தங்களின் தரிசனம் கிடைத்தது. என்னைத் தங்கள் மாணாக்கனாக ஏற்றுக் கொண்டு அருள் செய்ய வேண்டும்"

"என்ன கேட்டாய்? உன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? நான் அரச குடும்பத்தாருக்கு மட்டுமே கற்பிப்பவன். உன்னைப் போன்ற ஏழைச் சிறுவனுக்குக் கற்பிக்க மாட்டேன். அரசகுமாரர்கள் வரும் நேரம் நீ போய் வா. உனக்கேற்ற ஆசானைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வித்தையைக் கற்றுக்கொள். என் பூரண ஆசி உனக்கு."
கைகளை உயர்த்தி ஆசி வழங்கிவிட்டு துரோணர் அங்கிருந்து சென்று விட்டார். மண்டியிட்டு அமர்ந்திருந்த அந்த வேடுவச் சிறுவன் கண்களில் நீர் பெருக நின்றான். அவனது பல நாள் ஆசை நிறைவேறாமல் போனது பற்றி மிகவும் வருந்தினான். எங்கே துரோணர் பாதங்களை வைத்திருந்தாரோ அந்த இடத்திலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டான். துரோணர் சென்ற திசை நோக்கி வணங்கினான்.
விடுவிடுவெனத் தன் இருப்பிடம் நோக்கி நடந்தான்.

இல்லம் சேர்ந்த அச்சிறுவன் மண்ணைக் குழைத்து துரோணரைப் போன்ற ஒரு சிலையைச் செய்து வைத்துக் கொண்டான். அந்தச் சிலையின் முன்னால் நின்று கொண்டு வணங்கினான். பின்னர் தனது பயிற்சியைத் தொடங்கினான். துரோனரையே தனது குருவாக மானசீகமாக வரித்துக் கொண்டான். விரைவிலேயே சிறந்த வில் வீரனாக ஆனான்.

நாட்கள் கடந்தன. ஒரு நாள் துரோணரும் அவரது மாணாக்கரான நூற்று ஐய்வரும் காட்டுவழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியில் இரண்டு காட்டுப்பன்றிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இருந்தன.அப்போது " அர்ஜுனா! இப்பன்றிகளைக் கொல்" எனக்கட்டளையிட்டார் குரு.
அர்ஜுனன் திகைத்தான். " ஒரே பாணத்தினால் இரண்டு உயிர்களை ஒரே சமயத்தில் கொல்ல முடியுமா? குருவே, அப்படிப்பட்ட கலையை நீங்கள் இன்னும் எனக்குக் கற்பிக்கவில்லையே." இதற்குள் இரண்டு பன்றிகளும் வெகு உக்கிரமாகப் போரிட்டுக் கொண்டு வழியை அடைத்துக் கொண்டு இருந்தன. அப்போது எங்கிருந்தோ அம்புகள் வந்து ஒரே அடியில் இரண்டு பன்றிகளையும் வீழ்த்தியது. பன்றிகள் இரண்டும் ஒரே சமயத்தில் வீழ்ந்து இறந்தன. இதைப் பார்த்த அர்ஜுனன் திகைத்து நின்றான். தன் குருவை சந்தேகத்தோடு பார்த்தான். "தன்னினும் சிறந்த வில்வீரன் ஒருவன் உள்ளான். அவன் விட்ட பாணமே இதற்குச் சாட்சி. இந்தக்கலையை அறிந்தவர் துரோணர் ஒருவரே. இன்று மற்றொருவர் உள்ளார் எனில் இதைக் கற்பித்தவர் தனது குருவே. " இவ்வாறு அர்ஜுனன் எண்ணம் ஓடிற்று.

அப்போது வில்லும் கையுமாக அங்கு வந்தான் அன்று வந்த வேடுவச் சிறுவன். துரோணரைக் கண்டதும் மண்டியிட்டு வணங்கினான்.

"ஏ சிறுவனே! உனக்கு இக்கலையைக் கற்பித்தவர் யார்? உன் குரு யார்?" சற்றே கோபமாகக் கேட்டார் துரோணர்

"தாங்கள்தான் எனது குருநாதர். தினமும் நான் உங்கள் முன்னிலையில்தானே பயிற்சி மேற்கொள்கிறேன்."

"பொய் சொல்லாதே! ராஜகுமாரர்களைத் தவிர நான் யாருக்கும் கற்பித்ததில்லை. உண்மையைச் சொல்."

"என்னுடன் வாருங்கள்." என்று அழைத்த சிறுவனுடன் அனைவரும் அவன் இல்லம் சென்றனர். காட்டின் நடுவே ஒரு குடிசை. அதன் முன்னே ஒரு திறந்த வெளியில் நாடு நாயகமாக துரோணரின் சிலை அமர்ந்த நிலையில் அமைக்கப் பட்டிருந்தது. அச்சிலையை வணங்கிய சிறுவன் "இவர்தான் என் குருநாதர். இவர் முன்னால்தான் நான் பயிற்சி செய்கிறேன்." என்றான் பணிவோடு.

"இது எனது உருவம்போல் உள்ளதே"

"ஆம் குருதேவா. தங்களின் பாதம் பதித்த மண்ணைக் கொண்டுவந்து அதைச்சேர்த்து ஒரு சிலை செய்து தாங்களே அமர்ந்து எனக்குப் பாடம் சொல்வதாக நினைத்துக் கொண்டேன். தங்களை என் மனதில் குருவாக எண்ணிக் கொண்டு தினமும் வணங்கி வருகிறேன்."

துரோணர் அச்சிறுவனின் குருபக்தியே அவனுக்கு இத்தனை திறமைகளும் வளரக்காரணம் என்பதைத் தெரிந்து கொண்டார். ஆயினும் அர்ஜுனனுக்கு வில்லுக்கு விஜயன் என்ற பெயரைப பெற்றுத் தருவதாக வாக்குக் கொடுத்திருப்பதால் இந்தச் சிறுவன் இனியும் வில்லை தன் கையில் எடுக்கக் கூடாது என முடிவு செய்தார். சிறுவனை அன்புடன் பார்த்தார்.

"சிறுவா!, உன் பெயர் என்ன?"

"என் பெயர் ஏகலைவன். இந்தக் காட்டில் வசிக்கும் வேடுவர் தலைவரின் மகன் நான்."

"உன் திறமையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். குருதக்ஷிணை தரவேண்டாமா நீ?"

"குருவே! எதுவேண்டுமானாலும் கேளுங்கள். சிங்கம் புலி இவை வேண்டுமா? மான்கள் வேண்டுமா? நொடியில் பிடித்துவருவேன் .உங்களுக்குக் குருதக்ஷிணை யாகத் தருவேன்"

"அதெல்லாம் வேண்டாம். ஏகலைவா! நீயே சிறந்த மாணவன். என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்குக் குருதக்ஷிணையாக உன் வலதுகைக் கட்டை விரலைத் தருவாயா?"

"தாங்கள் எனது குரு என ஒப்புக் கொண்டதே எனக்குப் போதும். தாங்கள் குருதக்ஷிணை என என் உயிரையே கேட்டாலும் நான் தரத் தயாராக உள்ளேன். பெற்றுக்கொள்ளுங்கள்."
மறுகணம் தனது இடது கை வாளால் வலதுகை கட்டை விரலை வெட்டி ஒரு இலையில் வைத்து அவர் பாதத்தில் வைத்துப் பணிந்து நின்றான் ஏகலைவன்.
மனம் மகிழ்ந்த துரோணர் "ஏகலைவா! குருபக்தி என்ற சொல்லுக்கு நீயே ஒரு உதாரணம். உலகம் உள்ளவரை உன் பெருமையை இவ்வுலகம் பேசும்." என்று ஆசிகூறி அங்கிருந்து சென்றார். அர்ஜுனனுக்குப் போட்டியாக ஒருவன் வருவதைத் தடுத்து விட்ட நிம்மதி இருந்தாலும் ஒரு நல்ல வில்வீரனை அவனது வீரத்தை திறமையை அழித்துவிட்டோமே என்ற வருத்தமும் துரோணருக்கு இருந்தது.

ஆனாலும் குருபக்தியில் சிறந்தவன் ஏகலைவன் என்ற புகழை அவனுக்குக் கொடுத்து விட்டோம் என்ற பெருமை துரோணருக்கு நிம்மதியைக் கொடுத்தது.

2016-06-01 08:55:47 by yamuna

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏரெடுத்து பார்ப்பதும் கிடையாது.

ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழமை போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான்.

இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுட்குள் ஒரு நகைப்புடன் கூடிய கேள்வியும் வேற.

திடிரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். அன்று அதே இடத்தில் உணவுப்பொதியை தேடினான். உணவு இருக்கவில்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். இரண்டாம் நாள் பார்க்கிறான், அந்த இடத்தில் உணவுப்பை இல்லை; மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.

இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று. உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தவும் இல்லையாயின் வேலையை விட்டு விடுவதாகவும் கூறினான். அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்த்தையையும் சொன்னான். உடனே முதலாளியம்மா கேட்டார்; எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளன்றிலிந்து என சொன்னதும் முதலாளியம்மா 'ஓ' என அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கேட்டான்.

அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்.

நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும் ஏரெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான்.

அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில் சொல்லாமலே செல்வான், அவனது தந்தையைப் போல.

ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழமை போல நன்றி சொன்னான் காவலாளி. அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் "எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது" என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.

நாங்களும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலே அவர்களை தவறாக முடிவெடுத்துவிடுகிறோம். அடுத்தவரது நடவடிகைகளுக்கு பின்னால் ஒழிந்துள்ள உண்மைத்தன்மையை அறியாமல்.

இந்தக் கதையிலிருந்து இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம்;

01. எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது.

02. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

2016-05-28 08:23:16 by arul unique

                   4

ஒரு நாள் பணக்கார தந்தை அவரது மகனை வெளியூர் கூட்டிச்சென்றார்....

அவரது மகனுக்கு ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.

2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்.

வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்....
" அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா...? இந்த சுற்றுலா இருந்து என்ன கத்துக்கிட்ட? "
.
மகன் சொன்னான்...
" பாத்தேன்... நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க...
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்... அவங்க கிட்ட நதி இருக்கு..
இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்... அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு...
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம்... அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க...
திருடங்க வராமே இருக்க நாம வீடு சுத்தி செவுரு கட்டி இருக்கோம்... அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க... "

தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்...

" ரொம்ப நன்றி பா .... நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு..."

2016-05-05 13:03:10 by arul unique

மனசை தொட்ட பதிவு. ..!

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.
°•○●
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).
°•○●
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,
♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
°•○●
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது.
அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
அவள் சொன்னாள்,
"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;
ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.
இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று,
அவள் சொன்னாள், "முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.
°•○●
ஆம்!
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!
*
*

2016-04-23 15:43:04 by arul unique

Vaiko's journey: From Eelam Prabhakaran to 'Captain' Prabhakaran| Election fever - YouTube youtube.com

A sneak peek into Vaiko's amazing journey. A man who began as an ardent supporter of Eelam Prabhakaran, now has to back 'Captain Prabhakaran' aka Vijayakanth...

www.youtube.com/watch?v=T8MnV9_zGxk

Tamil Politics History- Must Watch

2016-04-23 12:25:18 by sekar

மன்னா.. என்னா?- தேர்தல் அறிக்கை செய்யும் மாயம்!

புத்தக காற்றாடி மாயாஜால அறை திறப்பு விழாவால் அரண்மனை வளாகம் களைகட்டியிருந்தது. மந்திரி பிரதானிகள், அதிகாரிகள், பொதுஜனங்கள் கூட்டம் அலைமோதியது.

குதிரையில் வந்திறங்கினார் மன்னர். ‘‘ஸ்.. ப்பா.. என்ன வெயில்.. என்ன வெயில்’’ என்று அங்கவஸ்திரத்தால் வியர்வையை துடைத்தபடியே மாயாஜால அறைக்குள் நுழைந்தார். மேலே ராட்சத மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது. ஆளையே இழுத்துக்கொண்டு போய்விடும் போலிருந்தது காற்றின் வேகம். வெயிலில் வந்த களைப்பு தீர நின்று சிறிது நேரம் காற்று வாங்கிவிட்டு, அறையைப் பார்வையிட புறப்பட்டார்.

அதென்ன புத்தக காற்றாடி மாயாஜாலம்? அறைக்குள் ஆங்காங்கே காற்றாடிகள் இருக்கும். அதன் அருகே ஏதாவது புத்தகத்துடன் போய் நிற்க வேண்டும். அந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் உண்மை என்றால், காற்றாடி சுற்றாது. பொய் என்றால் சுற்றும். இதுதான் மேட்டர்.

மக்களுக்கு குஷியோ குஷி. தங்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்கள், தாத்தா எழுதி வைத்துவிட்டுப் போன உயில், ‘நலம், நலம் அறிய ஆவல்’ என்று உறவினர் எழுதிய கடிதம், மளிகைக்கடை பில்.. இப்படி கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து, காற்றாடி சுற்றுகிறதா என்று பார்த்து குதூகலித்துக் கொண்டிருந்தனர். திருக்குறள், பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வைத்தபோது காற்றாடி துளிகூட அசையவில்லை.

இதையெல்லாம் பார்த்து வியந்தபடியே வெளியே வந்த மன்னர், ‘‘ஆமா.. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் என்று சொல்லி ஒரு புத்தகக் கட்டுகளை கொடுத்தேனே. அதை என்ன செய்தீர்கள்?’’ என்றார்.

‘‘மன்னா! அறை வாசலில் ராட்சத மின்விசிறி சுற்றுவதை கவனித்திருப்பீர்களே. எல்லாம் தேர்தல் அறிக்கைகள் செய்யும் மாயம். அந்த கட்டுகளைத்தான் அதன் அடியில் வைத்திருக்கிறோம்’’ என்றனர் பணியாளர்கள்.

2016-04-20 18:19:03 by Vaishu

நகைச்சுவை

பிரஜைகளில் ஒருவன் மன்னருக்கு போட்ட மொட்டை ஓலை, மந்திரிசபையில் படிக்கப்பட்டது. அதில் இருந்த விஷயம் இதுதான்:

‘‘மஹாராஜராஜஸ்ரீ மஹாகனம் பொருந்திய மன்னர்வாள் சமூகத்துக்கு வந்தனங்கள்! மூடவர்மன், மந்திவர்மன், பேக்குவர்மன், லூசுவர்மன் என்று உங்கள் வம்சாவளிகள்தான் தலைமுறை தலைமுறையாக இந்த நாட்டை ஆள்கிறீர்கள். போய்த் தொலையட்டும்! தூர தேசத்தில் இருப்பதுபோல ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் அறிக்கை வெளியிட ஏற்பாடு செய்யுங்கள். ஜனங்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கும். தவிர, இந்த வருஷத்தில் நீங்கள் என்னென்ன திட்டங்களை கட்டாயம் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் நாங்கள் தெரிந்துகொள்ள முடியும்’’

இதுதான் அதில் இருந்த தகவல்.

மன்னருக்கு வெ.. மா.. சூ.. சொ.. ஜிவ்வென்று ஏறிவிட, உடனே தேர்தல் அறிக்கையை ரெடி பண்ணிவிட்டார். அதன் சாராம்சங்கள்:

* வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கும் ஜனங்கள், வைத்தியர் வீட்டுக்குச் செல்ல இலவச மாட்டு வண்டிகள் விடப்படும். குறுகலான சந்து பொந்துகளில் செல்லும்போது மாடுகள் மெர்சலாகிவிடும் என்பதால், அத்தகைய பகுதிகளுக்கு ஆட்டு வண்டிகள் விடப்படும்.

* ஆராய்ச்சி மணி என்பது ஏதோ பொழுதுபோக்கு தொடர் என்ற ஞாபகத்தில் இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 முதல் 10.30 வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது 24 மணிநேர சேவையாக மாற்றப்படுகிறது. அதை சும்மா விளையாட்டுக்காக அடித்துவிட்டு ஓடிவிடும் சேட்டைக்கார சிறுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* இட்லி மாவு அரைக்க ஆட்டுக்கல், சட்னி அரைக்க அம்மி, கை விசிறி இலவசமாக வழங்கப்படும்.

* கிணற்றில் இருந்து தினமும் தண்ணீர் இரைத்து வேஷ்டியில் வடிகட்டி, வீடுகள்தோறும் 20 குவளைகள் வழங்கப்படும்.

* அந்தப்புரத் தோட்டத்தில் புலி ஆட, எலி ஓட, மலர்க் கொடிகள் அசைந்தாடும் காட்சிகளை மக்கள் கண்டுரசிக்க ஏற்பாடு செய்யப்படும்.

* வீடுகள்தோறும் தடையற்ற வெளிச்சம் பெற தீவட்டிகள், விளக்கு எண்ணெய் ஆகியவற்றோடு அவற்றை ஏற்றிவைப்பதற்காக தீவட்டித் தடியன்களும் இலவசமாக அனுப்பி வைக்கப்படுவர்.

* பாகுவதி ஆற்றுப் பிரச்சினை குறித்து பாகுபலி தேசத்துடன் பேச்சு நடத்தப்படும். அதில் எட்டப்படும் முடிவு அரசு கல்வெட்டில் பதிக்கப்படும்.

* ராஜபாட்டையில் ஜனசந்தடியைக் குறைக்க, ஒற்றைப்படை நாட்களில் ஒற்றை மாட்டு வண்டிகளும், இரட்டைப்படை நாட்களில் இரட்டை மாட்டு வண்டிகளும் மட்டுமே செல்லவேண்டும்.

* நம் தேசத்தில் நடத்தப்பட்ட முதலீட்டு விக்ஞாபன ஆலோசனைக் கூட்டத்தில் காந்தர்வ தேசம், பிரால தேசம், மங்கள தேசம் உட்பட பல தேசங்களை சேர்ந்த மந்திரி பிரதானிகள் கலந்துகொண்டார்கள். நம் நாட்டில் பஞ்சு மிட்டாய், இஞ்சி லேகியம் வணிகத்தில் பதினாயிரம் வராகன் முதலீடு செய்வதாக பிரதிக்ஞை செய்திருக்கிறார்கள்.

இவ்வாறு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்புர முன்னாள் பணிப்பெண்களுக்கு ஓய்வூதியம் உயர்வு, சாமரம் வீசும் பெண்களுக்கு ஜிகினா வைத்த சீருடை, தாத்தாக்களுக்கு மூக்குப்பொடி டப்பா, பாட்டிகளுக்கு வெத்தலப் பொட்டி போன்ற திட்டங்களும் மன்னர்வாள் பரிசீலனையில் இருப்பதாக கேள்வி.

2016-03-19 14:52:18 by Vaishu

                                                                   5        6                                                                                                                        108

அன்பின் குழந்தைக்கு............

உனக்கு நான் சில சொல்லிவிட வேண்டும்; அது புத்திமதியும் இல்லை, கட்டளையும் இல்லை.... எனக்கு தெரிந்த நல்லது சிலவற்றை உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேன்......

என்னுடைய குழந்தையே........ இன்று உன்னை ஏஜ் அட்டென்ட் செய்துவிட்டாய் என்றும், பெரியவள் ஆகிவிட்டாய் என்றும் இன்னும் சிலர் மெச்சூர்ட் ஆகிவிட்டாய் என்றும் சொல்கிறார்கள். இதில் ஏதாவது வார்த்தைக்கு அர்த்தம் உண்டா? மெச்சூர்ட் என்கிறார்களே... அறுபது வயதில் கூட கவுன்ஸ்லிங் எடுத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்; அதாவது அந்த வயதில் கூட மெச்சூரிட்டி இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் மகளே உன்னை இந்த வயதில் எப்படி மெச்சூரானவள் என்று சொல்ல முடியும்? பெரியவள் ஆகிவிட்டாய் என்று சொல்லிவிட முடியுமா? பெரியவள் என்பது குணவதியாக, புகழ் பெருமைப்பட வாழ்வதில் அல்லவா உள்ளது? ஆக இந்த வார்த்தைகள் எல்லாம் அலங்கார வார்த்தைகளே..........

மகளே நானும் இந்த பருவத்தை கடந்து வந்தவள் என்ற உண்மையின் அடிப்படையில் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்........

இதோ இன்று வயதுக்கு வந்துவிட்டாய் என்று சொல்கிறார்களே........ நேற்று இருந்ததை விட உன்னுள் என்ன மாற்றம் வந்துவிட்டது? எல்லாமே மிகைப்படுத்தல் தான் மகளே......

பிறந்து, கவிழ்ந்து, தவழ்ந்து, நடந்து........ என இப்படி உன்னிடம் குழந்தை பருவத்தில் எப்படி மாற்றங்கள் உருவானனவோ அதேப்போல் தான் இப்போது உனது உடல் வளர்ச்சி அடிப்படையில் உன்னிடம் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால் அது முழுமையாகி விடவில்லை. உன்னாலும் தாய்மையடையலாம் என்ற ஒரு அறிவிப்பை உனது உடல் சொல்லியுள்ளது. ஆனால் அது முழுமையாகிட வில்லை. 5 ஆம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு எதனடிப்படையில் அனுப்புகிறார்கள்? ஆறாம் வகுப்பிலும் தேர்ச்சி அடைவார்கள் என்ற அடிப்படையில் தானே? ஆனால் அனைவரும் 6 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைவரா? அதேப்போலத்தான் இன்னும் உனது மனம், உடல் வளர மீதமுள்ள நிலையில் உன்னை பெரியவள் ஆகிவிட்டாய்? என்று என்னால் எப்படி சொல்ல முடியும்?

செல்கள் உடலுக்குள் பிரிந்து பெருகுவது போல், தினம் தினம் பழைய திசுக்கள் மடிந்து புது திசுக்கள் துளிர்க்கிறது அல்லவா, அதேப்போல் தான் உள்ளே உருவான கருமுட்டை தன்னைத்தானே அழித்துக் கொண்டதுதான் இங்கே சொல்லகூடிய மென்சஸ் என்பது. அது புது நிகழ்வல்ல. எப்படி சிறுநீர் சிறுநீர்ப்பையில் பெருகியவுடன் வெளியே போகவேண்டும் என்று நமது உடல் அறிவுறுத்துகிறதோ, அதைப்போன்றே உள்ளே அழுகிய முட்டையை வெளியேற்றவேண்டும் என்று உடலும் முடிவெடுத்துவிடுகிறது. அழுகி தொங்கி கொண்டிருக்கும் புண் சதை என்றாலும் அதை அறுவை சிகிட்சை மூலம் அறுத்து எறிந்தால் அந்த உதிரப்போக்கில் உடல் சோர்ந்து போகுமல்லவா? அதேப்போல் இந்த மென்சஸ் எனும் வெளியேற்றல் நிகழ்விலும் சோர்வு ஏற்படும். அதை ஈடுசெய்ய நன்றாக சாப்பிட வேண்டும். குறிப்பாக உளுந்து கழி சாப்பிட வேண்டும்; சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அதை அம்மாவான நான் உனக்கு செய்து தருவேன்.

மகளே, இந்த மென்சசை சில பழமைவாதிகள் தீட்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைக்கலாம். வெளியே வருவது கழிவு, அது எதன்மீதாவது பட்டால் படும்பொருள் கெட்டுவிடும் என்பதால் அப்படி சொல்லப்பட்டது. ஆனால், இன்று அந்த வார்த்தை தேவையில்லை. இந்த நேரத்தில் நாம் ரொம்ப சுத்தமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளே இருந்தபோது தீட்டு இல்லை என்றால் அது வெளியே வந்த போது எப்படி தீட்டாகும்? நம் உள்ளே சென்ற உணவுப்பண்டம் வெளியே வருகையில் எப்படி அசிங்கமாகிறதோ அதேப்போன்றுதான்.... இதுவும் வெளிப்படுகையில் அசுத்தமாகி விடுகிறது. மலம், சிறுநீர் போனால் ஏற்படும் தீட்டு குளிப்பதன் மூலம் எப்படி சுத்தமாகி விடுகிறதோ அதுபோன்றே இங்கேயும் சுத்தமாக இருந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. இரண்டு நேரம் குளிக்கலாம். குளித்த பின்னர் துவைத்து வைத்த உடைகளை உடுத்தலாம். குளிக்கையில் வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரில் உடலை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இரண்டும் கிருமி நாசினிஅல்லவா? மஞ்சள் நீராட்டு விழாவில் மஞ்சள் எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது உனக்கு புரிகிறதா?

வீட்டில் சாம்பிராணி புகை போடுவதும் நல்லது. உனக்கு ஒரு குத்துவிளக்கு இன்று தருகிறேன். அதில் நீ தினம் நாள் தவறாது தீபம் ஏற்ற வேண்டும். மென்சஸ் நேரத்திலும் கூட... தீபம் ஏற்றி வைத்து "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மிநாராயணாய நமஹ" என்ற மந்திரம் அல்லது "ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நமஹ" என்று 108 முறை சொல்ல வேண்டும். இதை சிலர் தவறு என்று சொல்லலாம்; தீட்டு நேரத்தில் இறைவழிபாடா? என்று கூட கேட்கலாம். துன்ப நேரத்தில் தானே அதிகமாக அம்மாவின் அருகாமையை, இறைவனின் உதவியை நாடுகிறோம். இந்த மென்சஸ் நேரத்திலும் உனது உடல் வலியில் இருக்குமல்லவா? அந்த நேரத்திலும் நீ இறைவனை வழிபட்டால் உனக்கு பகவானின் அருள் இன்னும் கூடுதலாக கிடைக்கும் தானே.......?

அப்போ தீட்டு என்று இல்லையா அம்மா? என்று நீ கேட்கலாம். உண்டு கண்ணே. நாம் தியானம் இருக்க அமர்ந்தால், ஒன்றுமில்லாவிட்டாலும் நமது முகத்தில் உடலில் எதோ ஊர்ந்தது போலெல்லாம் தோன்றும். அப்படியிருக்கையில் இயல்பாகவே சொட்டு சொட்டாக அந்த அழுகிய கருமுட்டை பாய்ந்து வெளியேறி கொண்டிருக்கையில் நமக்கு ஒரு அசௌகர்யம் இருக்கும் தானே.... நமது நலனுக்காகவே அந்த நாட்களில் நம்மை ஓய்வெடுக்க சொன்னார்கள். வெளியில் சென்றால் அந்த சுத்தம், துர்நாற்றம் காரணமாக விஷ ஜந்துக்கள் தீண்டவும் வாய்ப்புண்டு; ஆகவேதான் அப்படி கட்டுப்பாடு விதித்தார்கள். ஆனால், நீ உனக்கான குத்துவிளக்கை குளித்து சுத்தமாக ஏற்றுவதால் ஒரு சிறு குற்றமும் இல்லை. விளக்கு ஏற்றுவது குற்றமா? இல்லை பகவானை அந்த நேரத்தில் நினைப்பது(தியானிப்பது) குற்றமா? என்று கேட்டால் பழமைவாதிகள் என்ன பதில் சொல்வார்கள்? பகவானை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டுதானே இருக்கிறோம். அந்த நேரத்தில் மட்டும் நம்மால் நினைக்காமல் இருக்க முடியுமா? இல்லை விளக்கு ஏற்றுவது மட்டும் குற்றமாகி விடுமா?

மகளே, உன்னை தீட்டு நேரம் என்று சிலர் குத்திக்காட்டலாம், நீ பெரியவள் ஆகிவிட்டாய் என்று மெச்சிக் கொள்ளலாம். இரண்டிலும் நீ உன்னிலை தவறாதே..... மாறாக வழக்கம்போல் விளையாடு; உடற்பயிற்சி செய்; ஓடு, தியானம் செய், உறசாகமாக இரு; நன்றாக படி, இறைநாமம் சொல். ஒருபோதும் எவர் என்ன சொன்னாலும் அந்த சுழலில் உன்னை சிக்க வைத்து விடாதே............ இயல்பாகவே பெண்கள் புகழ் மொழிக்கும், ஆசை வார்த்தைகளுக்கும் மயங்கி விடுபவர்கள். அதில் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனது கையெழுத்து அழகாக உள்ளது என்று சொல்லலாம். அதற்கு நீ உனது ஆரம்பக்கால ஆசிரியர்களே பொறுப்பு அல்லது உனது கையசைவு என்றே கருதி கொள்ள வேண்டும்; உனது ஆடை அழகாக உள்ளது என்று எவராவது குறிப்பிட்டால் அது நெய்தவன், சாயம் முக்கியவன், அதை தைத்தவன் கைப்பக்குவம் என்றே கருத வேண்டும், மட்டுமா அந்த மெச்சப்படும் துணிதான் இன்னும் சில நாட்கள் கழித்து கறையான் அரிக்கப்போகிறது என்பதை உணர வேண்டும். உன்னுடைய வார்த்தைகள் வசீகரமாக உள்ளது, நீ படிப்பில் கெட்டிக்காரி என்று புகழலாம்......... நீங்கள் தான் மெச்சுகிறீர்கள் உலகில் நான் அதற்குரிய அடையாளத்தை அடையவில்லையே என்று நினைத்துக் கொள்ள வேண்டும். ஆசை வார்த்தைகள் கூறும்போது எனக்கானதை அம்மாவும் அப்பாவும் செய்து தருவார்கள்; அவர்களை விட நீங்கள் அன்பானவரா? என்று கேட்க வேண்டும். முகஸ்துதி செய்யுமிடத்தில் நீ கவனமாக, எச்சரிக்கையுடன், முடிந்தால் அந்த இடத்தை விட்டு அகன்று இருக்க வேண்டும்.

இந்நேரத்தில் ஹார்மோன்களின் சுழற்சியால், அதன் பெருக்கத்தால் உடலில் கொஞ்சம் மினுமினுப்பு கூடும். ஆனால் அதே தோல் தான் நாளை வாடி சுருங்கி நிற்கப் போகிறது என்ற இயற்கையின் நியதியையும் எச்சரிக்கையாக உணர வேண்டும். ஆடை உடுத்துவதில் நாகரிகமாக இருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும். கூடப்படிக்கும் மாணவிகள் நாகரிகம் என்ற போர்வையில் அசிங்கமான ஆடைகளை அணிய உசுப்புவார்கள். ஆனால், நான் படிக்கத்தானே இங்கே வருகிறேன் என்று கல்லூரிக் காலங்களிலும் நினைக்க வேண்டும். குசுகுசுவென்றும், சத்தமிட்டும், மூன்றாம் நபரைப் பற்றியும், இடத்தில் இல்லாத நபரைப் பற்றியும் பேசும் மாணவிகள், பெண்களை விட்டு விலகியே இருக்க வேண்டும். நாகரிகம் மிகுந்த, அழகான, மென்மையான, இனிமையான சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயத்தில், தேவையில்லாத நபர்கள் பேசுகையில் எதிர்கருத்தும் சொல்ல வேண்டாம்; இது எனக்கு சம்பந்தமில்லாதது, அதனால்எதிர் மற்றும் மறுப்பு வார்த்தைகள் வெளியிட்டுக் கூட எனது எனர்ஜியை வீணடிக்க மாட்டேன் என்ற உறுதியுடன் இருக்க வேண்டும்.

அன்பு மகளே! குறிப்பாக "சுகத்தை விரும்பும் மாணவனுக்கு படிப்பு ஏறாது" என்ற விதுரநீதி மொழியை எப்போதும் உன்னுடன் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். டிவி பார்ப்பது தேவையற்ற வேலை. அந்த நேரத்தில் அறிவுக்கூர்மையை பெருக்கிக்கொள்ளலாம்; தெரியாதவைகளை தெரிந்து கொள்ளலாம் தானே.......

எனது ஆருயிர் குழந்தையே எப்போதும் போல் இப்போதும் இரு; உனது கடமை ஒன்றையே குறியாக வைத்திரு.........

இப்படிக்கு,

எப்போதும் உன்னை குழந்தையாக கருதி உனது நலனை மட்டுமே விரும்பும் உனது அம்மா.............

2016-03-12 18:50:33 by Vaishu
Back to Top

Popular Tufs

Related Tuf

Related Tuf

Happy Birthday

Happy Birthday

Petrol bombs thrown at Karnataka

Petrol bombs thrown at Karnataka

Camouflage Petscat with white doll

Camouflage Petscat with white doll

Tamil Stories Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Stories category.