eluthu.com/kavithai/352684.html
கரப்பான்பூச்சியின் டின்னர்
அந்த ஒரு கரப்பு
எப்போதும் என் படுக்கையில்...
அயர்ந்த நடுநிசியில்
தலை ஏறி கடிக்கும்.
ஊசியாய் துளைக்கும்.
பதறி விழித்து தள்ள
தலையணை பறக்கும்.
கரப்போ யூகமற்று
பறந்து திடுமென
என் நோக்கி வரும்.
தலை தாண்டியும்
கடிக்குமோ அதுவென்
சிந்தனை பூக்களையும்...
கடிபட்ட சிந்தனைகள்
குழறி வெடிக்கும்
நூறு கனவில் ஒரு கனவென.
பார்க்கும்போதே
நொடியில் கரப்பு மறையும்
என் வீட்டில் இருக்கும்
அதன் வீட்டில்.
முகவரியற்ற அதன் வீடு
தெரியும் எனக்கு.
அந்த வாசலில்
மரணக்கோலம் போடலாம்.
போட்டால் தூங்கலாம்.
பார்த்துள்ளீரா...
கரப்பின் இறுதி நொடிகளை...
பீஷ்மனாய் படுத்து
நெஞ்சம் விரிய
உலகத்தை சுரண்டும்
வேக வேகமாக...
காலா என் காலருகே வாடா...
சூழ்ந்த எறும்புகள்
இழுக்க இழுக்க
கம்பீரமாய் போகும்
டான் குயிக்ஸாட் கவர்னராய்
தான் இனி உணவு
என அறிந்தாலும்...
போதும்...
மருந்து வைக்க
மறுத்து விடும் என்
கடிபட்ட சிந்தனைகள்..
eluthu.com/kavithai/352671.html
ஒளிக்காட்டில் என் மௌனம்
எங்கும் நிரம்பி வழிகிறது
இருள் குழப்பிய சிந்தனை…
ஊரெங்கும் மொய்த்த சப்த உண்ணி
இரைச்சலுடன் நின்றது என்னருகில் இரையெனக் கொள்ள.
அஞ்சித் ததும்பிய தும்பியாய்
துள்ளிக் கிளம்பிய கால்கள்
கலைந்து குலைந்தன
புதரினில் சிக்குண்ட மானாய்.
காரிருள் கூரிய வளைபல் காட்டி
நெருக்கிப் பிணைத்தது.
வன்மம் முறைத்த நாக்கினுள்
ஏறிய உயிரின் நறுஞ்சுவையில்
வால் நெளித்த வன்னிருள்
ஊதிப் பெருக்கிய கடுஞ்சிரிப்பில்
வெடித்துச் சிதறின ஆழ்கடல் சங்கு.
ஊண் மரமென வி றைத்த உடலில்
வந்து சேர்ந்தன அகால பட்சிகள்…
நிர்வாண சொற்கள் குழைந்தன
காற்று கமறிய கணத்தில்…
விட்டுப்பிரிந்த அடர்குரல் முழங்க
சுடரென ஒளிர்ந்தது என் மௌனம்.
நன்றி.
வணக்கம் லண்டன்.காம்
ஏப்ரல் 3,2018
eluthu.com/kavithai/352637.html
பெண் போலீசை ரசித்த கண்கள்
பொலிவியன் படம்.
மொழியா முக்கியம்.
அவள் சுடும் அழகு
ஓடும் அழகு
காப்பியம் சொல்லும்
காவியக் கண்கள்.
பேசிக்கொண்டே
எதிரிகள் கணித்து
எகிறிடும் சாமர்த்தியம்.
கலையாத உடுப்பில்
மனம் கவரும் நுட்பம்.
கற்பனை படம்தான்.
கற்பனை கவிதையும் கூட.
இருப்பினும் என்னால்
என்ன செய்ய முடியும்?
பாடாய் படுத்துகிறதே
இந்த தலைப்பும்
மாலையில் பார்த்த
அந்த போலீசும்.
அந்த பார்வையும்.
உடுப்பு தாண்டி
மலர்ந்த சிரிப்பும்..
eluthu.com/kavithai/352251.html
இனி நீ மட்டும்
உன் பொய்மைகள் என்பது
கனவில் செதுக்கிய
பொம்மையாய் நீ மட்டும்.
காற்றுக்கு ஆடும்
கதவுகளாய் நீ
ஆடும் மனதில்
வந்து செல்கையில்
உன் சைகைகள் மட்டும்.
தேவதையின் கண்களில்
பௌர்ணமி நீ மட்டும்.
சாகா வரங்களில்
அமிர்தம் நீ மட்டும்.
வந்து வந்து
தொலையும் நாட்களில்
சாட்சிகள் நீ மட்டும்.
பாய்ந்த நதியின்
தொல் சிரிப்பில் விரியும்
பசுமை நீ மட்டும்.
என்னில் தளர்ந்த
எவற்றுக்கும் உயவு
இனி நீ மட்டும்...
eluthu.com/kavithai/352303.html
சைக்கிள் பையனும் ஒரு காதலும்
அன்று அமர்ந்து பேசியது
உதிரம் குடித்த
விஷபுற்கள் மீது போலும்.
நமது பிரிவு என்பது
அங்கு தொடங்கியது.
வழக்கமான காரணங்களே...
அம்மா,அப்பா..
மணமுடிக்கா அக்கா...
மனமோ மூடக்குளவியாய்
சுற்றி அலைந்தது
காதல் நினைவுகளில்...
ஓய்வின்றி உரைத்தாய்
பிரிதலின் நியாயத்தில்
புரிதலை உருவாக்க...
உன் வாக்கியங்கள்
எங்குமே முற்றுப்பெறவில்லை
முட்டி மோதியும்
குழம்பி தெறித்தும்
விழுந்து எழுந்து
உடைந்து உடைந்து
நொறுங்கி கொண்டிருந்தது
சைக்கிள் பழகும் சிறுவனோடு.
உன் எந்தப்பார்வைக்கும்
அர்த்தம் தெரியாத எனக்கு
இனி என்ன என கேட்கும்
இந்தப்பார்வையை
புரிந்து கொண்டேன்.
சைக்கிள் பையன் போக
நீயும் செல்கிறாய்.
உன் பின்னே வருகிறது
என் காதல்
வழி தவறிய கோழிக்குஞ்சாய்...
eluthu.com/kavithai/347947.html
பழைய ரணம்
நாம் மாறிவிட்டோம்...
பொத்தான்களாக
நான் உன்னை
அழுத்த_நீ என்னை அழுத்த...
நம்மை அவன் அழுத்த
விரலும் பலகையுமாய்
மின்சார மிச்சங்கள்...
நண்ப...
நினைவுறுத்தி சொல்...
கடைசியாய் எப்போது
மிதித்தாய் உன்
தொழுவத்து மாட்டு சாணம்...
eluthu.com/kavithai/347964.html
குரல்
ஒலித்தல் என்று
மாறிப்போனேன்...
நினைவுச்சவ்வுகள்
சொற்களின் நிறம்
கொண்டு
காலங்களை தொகுத்தன.
விடுபட்ட குரல்கள்
சப்தம் கௌவி வனதிசை
நோக்கி புரண்டன.
மெய்மையின் கூற்றுக்கள் பிளந்து
ஞானக்கூச்சலாய்
உயிரில் கவிந்தன.
மர்மத்தின் கூக்குரல்
தேசமெங்கும் ஊடுருவ
சித்தம் பற்றினேன்
உன் ஒருவனுக்காக...
வந்தனா புனே மஹாராஷ்டிரா - காதல் கவிதை eluthu.com
eluthu.com/kavithai/352036.html
வந்தனா புனே மஹாராஷ்டிரா
வக்த் பி தெஹ்ரா ஹே
கெய்சே க்யோன் யே ஹுவா
காஷ் து எய்ஸ்செ ஆயே
ஜய்சே கோய் துஆ
து ரூஹ் கி ராஹத் ஹே
து மேரி இபாதத் ஹே....
ஸ்ரேயா பாடப்பாட
அவளும் நானும்
ஒருவர் விழியை ஒருவர்
துடைத்த நாட்கள்....
நீ பிரிந்தாய்...வந்தனா...
தனித்தவன் என்னுள்ளும்
தனித்து சிதைந்தேன்.
நீண்ட வாழ்க்கையில்
ஒரு புள்ளி தவறியதால்
கோலம் திருகி கொண்டது.
அவர் நினைவு வந்தது.
அன்றே சந்தித்தேன்.
கண்ணாடி குடுவை
ஒன்று தந்தார்...
வெறும் குடுவை. நீயும்
அப்படியே வைத்திரு என்றார்.
கிளம்பி வந்தேன் அறைக்கு.
பகல். நடுப்பகல்.
மங்கிய வெளிச்சம் அறையில்.
முன் வைத்து அமர்ந்தேன்.
குடுவை இருந்தது.
நேரம் கடந்தது.
ஒரு ஈ மேலே பறந்தது.
இரு எறும்புகள் சுற்றின.
வேறு இல்லை.
அவர் வந்தார்.
வெறும் குடுவை பார்த்தார்.
கண்ணை மூடிக்கொள்...
மூடினேன். தெரிந்தது.
வெறும் குடுவை அல்ல.
காற்று இருந்தது.
காற்று அசைய ஈரம்.
ஈரம்...மேகம்.மழை வர
வனம்.உயிரினம்.
பிரபஞ்சம். வாழ்க்கை.
குடுவையில் என் மனம்
மிதக்க...மனதில்
குடுவை மிதந்தது.
நான்,நீ,அவன்,அவள்,அது.
கோபம், வன்மம், இரக்கம்.
தொடல்,பார்த்தல், காதல்.
காதல்.நான்.அவள்.
மேரே ரஸ்க்கே கமர் துனே பெஹ்லி நசர்
ஜப் நசர் சே மீளெய் மஜா அஅகயா...
சோனு கக்கர் பாடப்பாட
அவள் என் கண்ணை
துடைக்கின்றாள்.
சட்டென விழித்தேன்.
இருந்தது எதுவும் இல்லை.
அறையில் இருந்த என்னில்
அறை இருந்தது என்னுள்.
காதல் என்பது பிரபஞ்சம்.
பெண் ஒரு சாதனம்.
வந்தவர் போய் விட்டார்.
நழுவி விழுந்தது அறை
என்னிடமிருந்து.
eluthu.com/kavithai/352027.html
தலைப்பை கவிதையில் தேடவும்
மனம் சலித்தது.
துயரம் கொண்டேன்.
யாதொரு பலனுமின்றி
நாட்கள் கழிகின்றன.
ஒவ்வொரு நாளும் நீ
பாத்திரங்களை உடைக்கிறாய்.
புதிய பாத்திரங்கள் செய்ய
எனக்கு கடினமாகிறது.
மீசை வளர்ந்தபோது
உனக்கு பிடிக்கவில்லை
பாத்திரம் உடைத்தாய்.
கடல் அருகே வீடு
பார்த்தபோதும் நீ
பாத்திரம் உடைத்தாய்.
அசைவம் பிடிக்காது என்பதும்
சாப்பிட தெரியாது என்பதும்
வேறு வேறானவை என்றேன்.
மறுபடி உடைந்தது.
நாற்காலி சிலசமயம்
என்னிடம் பேசுவதுண்டு.
அப்பா அதில்தான்
அபானவாயு கழிக்கையில்
உயிர் பிரிந்தது.
பேசப்பேச உடைத்தாய்.
இனி பாத்திரம்
எதுவும் என்னிடமில்லை.
வாயற்ற உன் கோபங்கள்
என் மென்மையில்
கூர்தீட்டி உன்னை
ஏவி விடுகின்றன எட்டாத
என் பாதாளத்தில் இருக்கும்
உள்ளெங்கும் இருள் குடித்த
அண்டாவின் விலா ஓடிக்க...
நீயும் ஒடுகிறாய் உன்
மனதினை மீறியும் என்
சமிக்ஞைகள் எதிர்த்தும்...
இருள் உன்னை விழுங்கும்.
அப்போதும் நீ
வெளியேறும் பாதை என்பது
துக்கத்தில் ஓய்ந்த இந்த
நாற்காலி தன்னைமறந்து
தும்மும்போது மட்டுமே.
eluthu.com/kavithai/351812.html
காகிதம் அருந்திய கனவின் குருதி
நெகிழ்ந்த துயிலின் கரையில்
உருப்புரியா ஒருதுளி கனவின்
நினைவினில் என் மனம்.
காற்றினுள் நிலவிய ஈரமாய்
விழியினில் தேங்கிய நீர்
நிற்பதறியாது வழிந்து சுட்டது
இதயத்தில் நீ செழித்த நாட்களை.
உன் முகம் தெரிந்ததோ கனவில்…
பிரார்த்தனையின் வாசனையாய்
வாழ்ந்திருந்த காலத்தின்
லஹரி தொடர்ந்துவரினும்
நீயற்ற என் வீட்டில் இருப்பதோ
நாகசீறலின் வலியூட்டும்அச்சங்களே.
சாலைமர நிழல்களும் இசையும்
வாய்த்த புத்தகங்களின் சகபகிர்வில்
திருமணத்தில் ஒருவரான நம்மை
அன்றொரு அறையில் சிலரின்
காகிதமும் குச்சிப்பேனாவும்
ரத்தென்று சொல்லி விட்டன.
உயிரின் மீது உலைகள்
தாவி நின்று கொதிக்கின்றது.
அசையாது கிடக்கின்றேன்
வெண்ணிற பருத்திப்படுக்கையில்…
கொலையுறும் மழலை போல்
விபரமற்று துடிக்கும் மனதுக்கு
தெரியவேயில்லை…
கண்ட கனவில் உன் முகமும்
உன் உடையும் உன் சூடும்…
எழமுடியாது தவிக்கும்
சுடப்பட்ட குதிரையென
துணை நீங்கிய மனம்
தனித்துத்துடிக்கிறது விரிப்பினில்…
நகங்களில் சிக்கிக்கொண்டு
வீறிட்டு அழும் அந்த கனவை
என் செய்ய என் தோழியே?
நன்றி
வணக்கம் லண்டன்
இணைய இதழ்..
Popular Tufs
Kavithai Related Sharing
Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Kavithai category.