HOT

                                                                                                                                            04426205655 1098

மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. கெல்லீஸில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது வாசலை ஒட்டி நின்ற ஒரு பாட்டி என்னை நோக்கி கையை நீட்டினார். இடுப்பில் இரண்டு வயது சிறுமியை வைத்திருந்தார். பக்கத்தில் நான்கு வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.

``பிச்சை போட மாட்டேன். வேணும்னா உங்களை ஏதாவது இல்லத்தில் சேர்த்து விடுறேன். மூணு வேளை சாப்பாடு போடுவாங்க.. பசங்களை படிக்க வைப்பாங்க.. வர்றீங்களா” என்று.. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனைப்போல் நானும் வழக்கமான என் உரையாடலை ஆரம்பித்தேன்.

வழக்கமாக இப்படி நான் கேட்டதும் பிச்சைக்கேட்டவர்கள் முறைத்துப் பார்த்துவிட்டு முணுமுணுப்பாக திட்டிக்கொண்டே செல்வார்கள். சிலபேர் சமாளிக்கும் விதமாக ``அப்புறம் வர்றேன் சார்..” என்று நகர்ந்து விடுவார்கள். அப்போதெல்லாம் பிச்சை எடுப்பது பழகிவிட்டால் சுகமானதாகவிடும்போல என்று தோன்றும்.

ஆனால் முதல்முறையாக அந்த பாட்டி நான் எதிர்பாராத ஒரு பதிலை சொன்னார். ``எய்யா சாமி.. புண்ணியமாப்போவும்.. இந்த புள்ளைவோல சேர்த்துவுட்டுருப்பா.. வழி தெரியாமத்தான் பிச்சை எடுக்குறேன்ப்பா..” என்று சொல்லும்போதே கண் கலங்கினார்.

``சரி பாட்டி டோக்கன் வாங்கி தர்றேன்.. சாப்பிடுறீங்களா .. ” என்று கேட்டேன்.

``சாப்பாடு வேணாய்யா.. புள்ளைக்கு பால் மட்டும் வாங்கிகொடுப்பா.. இவங்க அப்பன்காரன் வுட்டுனு போய்ட்டான். இவங்க அம்மா அஸ்பிட்டல்லருக்கா.. ஆஸ்த்துமா நோய்.. அவள பாக்க தான் போய்கிணுக்கிறோம்.. பஸ்சுல போக காசு வேணும்ப்பா..” என்றார்.

அந்த சிறுவனை பார்த்தேன்.. இளமாறனைப் போலவே இருந்தான். அந்த பாட்டி நிச்சயம் பொய் சொல்லவில்லை என்று உள்ளுணர்வு சொல்லியது. பக்கத்து கடையிலிருந்து வாங்கிய பால் பாக்கெட் பாட்டியிடமும் பிஸ்கெட் பாக்கெட்டை சிறுவனிடமும் கொடுத்தேன். அதை வாங்கியதும் அவன் முகத்தில் அவ்ளோ சந்தோசம்.

``ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன்.. படிக்கிறீயாடா..” என்று கன்னத்தை தட்டி கேட்டேன்.

``ஓ..” என்று வேகமாக தலையாட்டினான்.

``உங்க பொண்ணுக்கிட்ட கேட்டுட்டு எனக்கு முடிவு சொல்லுங்க..” என்று பாட்டியிடம் என் போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு, பஸ்ஸில் போக கொஞ்சம் பணமும் கொடுத்தேன்.

வாங்கி கொண்ட பாட்டி, இடுப்பில் இருந்த பேத்தியிடம் ``மாமாவுக்கு கிஸ் கொடு.. கிஸ் கொடு.. என்றார். அந்த குட்டி தேவதை கைகளை தன் வாயில் வைத்து எடுத்து என்னை நோக்கி நீட்டி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து கையை ஆட்டி சிரித்தது. அவளின் கன்னத்தை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன்.

மாலை வரை பாட்டியிடமிருந்து போன் வரவில்லை. ``சரி.. இதுவும் வழக்கம்போல் தான்..” என்று நினைத்து மறந்துவிட்டேன்.

ஆனால் இரவு புதிய எண் ஒன்றிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பாட்டி தான் பேசினார். பக்கத்து வீட்டுக்காரரின் போனிலிருந்து பேசுவதாக சொன்னார்.

``என் பொண்ணுகிட்ட சொன்னேம்பா.. புள்ளைவோல ஸ்கூல்ல சேர்த்துர சொல்லிச்சுப்பா.. நல்லாருப்ப சாமீ.. நீ சொன்ன எடத்துல சேர்த்துவுட்டுருப்பா.. இதுகளையும் பாக்க முடியாம என் பொண்ணையும் பாக்க முடியாம் சீரழிஞ்சுகினுகீரம்ப்பா.. ” என்று அழுதபடி சொன்னார்.

``சரி நான் ஏற்பாடு பண்றேன்.. கவலைப்படாதீங்க..”என்று பாட்டியிடம் சொல்லி விட்டு, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு துறையிலிருக்கும் நண்பர்களிடம் விபரம் சொன்னேன்.

மறுநாள் பாட்டியை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி குழந்தை மீட்பு பணியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தேன். அவர்களும் பாட்டியிடம் விசாரணை நடத்தியப்பின் தற்போது தங்கள் பாதுகாப்பில் அந்த இரு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டார்கள்.

அந்த இரு குழந்தைகளும் பாதுகாப்பு இல்லத்தில் நல்ல சாப்பிட்டு சந்தோசமாக இருப்பதாக சொன்னார் மீட்பு பணியில் ஈடுபட்ட தோழி.

கேட்கவே சந்தோசமாக இருந்தது..

அந்த குழந்தைகளுக்கும் வாழ்வு வசப்படட்டும்..

(நீங்களும் கூட பிச்சை எடுக்கும் சிறுவர்களையோ அல்லது வேலை பார்க்கும் குழந்தைகளையோ எங்கேனும் பார்த்தால் 04426205655 அல்லது 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க உதவலாம்.. )

2016-03-18 14:17:17 by francis
Back to Top

Popular Tufs

default thumb image

October Birthdays Celebrities Born

Sugar cane import for pongal

Sugar cane import for pongal

Sekar V of AIADMK

Sekar V of AIADMK

Daffodil Flowers Flower Photography

Daffodil Flowers Flower Photography

Parivu Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Parivu category.