eluthu.com/kavithai/354289.html

அடுத்த நிறுத்தத்தில் இறைவன்
பெயரற்ற வானத்தில்
நிறுத்தமற்ற மௌனம்.
இறைவன் என்பார்கள்.
உருவத்தில் ஸ்தம்பித்த மனம்
தனித்து தோற்றது
இருப்பின் மீது நகரும் இலையாய்.
நிறங்கள் ஜோடித்த பூமியில்
கண்ணீரில் முளைத்த ஆவியுடன்
பெயரற்ற அவனை அவளை
தேடி அலைகிறேன்
காண்கின்றனர் யாவரும்
ஒவ்வொரு நிறுத்தமும் வயதை
பிடுங்கி கொண்ட காட்சியை.
அருவம் ஊமையான உருவம்.
ஒலிகளில் தப்பிக்கும்
அவனும் அவளும்
பாய்ச்சல் உருகும் காலத்தில்
தொக்கிய நம்பிக்கையில்
தென்படக்கூடுமென்று
விசனம் பீடித்த மனம்.
காட்டப்படக்கூடும்
அடுத்த நிறுத்தத்தில்
அவனும் அவளும்
அவர்கள் என்பது இல்லை
என்பதன் சாட்சி படிமமாய்..

2018-05-17 18:23:11 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353810.html

மனதின் பொய் தகவல்கள்
அவை பயங்கள்தான்.
அன்றைக்கு தேவையான
அப்பம் முதற்கொண்டு
ஆரத்தி காட்டிடும்
சாதனைகள் வரையிலும்
ஒட்டி வளரும் சாருண்ணி.
யுக்திகள் கூறி குழப்பி பின்
அதிகாரம் செய்யும் மனதில்
பயம் நக்குகிறது விடாமல்.
சாய்ந்த இரவில்
பழி வாங்கும் இவை
மரண எரிச்சல்கள்.
ஆதரவற்ற கண்ணீரை
உறிஞ்சி குடிக்கும் இரவு
மெல்லும் என் துயிலை
காக்கையின் கொத்தலுடன்.
அரவமற்று எழுந்து செல்லவும்
அச்சத்தில் புகையும் கால்கள்.
உருண்டோடுகிறது
உறக்கம் படிகளில்.
காகிதம் பேனா
கற்பனை மனைவி(கள்)
இல்லாது போனால்
இல்லாமல் போயிருப்பேன்..

2018-05-11 19:03:47 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353703.html

பெண்கள் படிக்க வேண்டாம்
உன் ஓடையில்
கலைகிறது என் கவனம்.
காற்றின் படுக்கையில்
அந்த மைதூனம்.
உயிரில் மயக்கம் பரவ
இலை தவறி விழுந்த எறும்பாய்
தரையெங்கும் என் ஓடை.
என்னை நானே கொன்று
உயிர் மீட்க இதுவன்றி
வேறொன்று உண்டா?
சாய்ந்த உடலுடன்
விழிக்கவியலாது மோதுகின்றன
அந்தக் கோபத்தில்
வெடித்த அழுகை.
புறங்கை உதறியதும்
இன்னும் சிந்தின
வழியாது நின்ற சொட்டுகள்...
சொட்டும் மழைத்துளியில்
தோள் உரசி தீப்பட்ட
நினைவுகளில் கொதித்தது
திசையின்றி அலைந்த பீஜம்.
குறி வைத்து பொய்த்த வாள்
தவறாது அறுத்தது
கனவின் சினைப்பைதனை...
விடியலில் வரும் உறக்கம்
கருக்கிப்போனது பூபாளங்களை.
சாவை கொல்லும் மைதூனம்..

2018-05-10 19:10:27 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353647.html


ஒரு கவிதை ஒரு மரணம்
எழுதப்பட்ட அக்கவிதை
விடப்பட்ட தாளிலிருந்து
கரையலானது மனதில்
காண்பவர் கண்களிலிருந்து.
வருவோர் போவோரெல்லாம்
வாசித்தும் மறந்தும்
நகர்ந்து பாய்ந்தனர்
அவரவர் பொழுதுபோக்கில்.
தப்பி விழுந்த புறாகுஞ்சாய்
மனங்களை தேடி அலைந்தது
குரல்களை அனுப்பி அனுப்பி.
அர்த்தங்களை ஏவியே
பழகிப்போன மனம்
ஆளற்ற பாழில் மௌனமாக
பாவிசைத்து அலைய
சபித்த கவிதைகள்
மரித்தது காகிதத்தில்...
இன்னொரு கவிதை
இன்னொரு நாளில்
இன்னொரு மனதில்
இன்னொரு...

2018-05-09 19:34:10 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353556.html

பொம்மை சில தகவல்கள்
அந்த மாநிலத்து
பொம்மைகள் பிரசித்தம்.
தமிழ் பேசும் பொம்மைகள்.
சூது வாது அற்றது.
யார் யார் வாய் எது கேட்பினும்
நம்பி தலையாட்டும் சமர்த்து.
பொம்மைகள் தானாய் இயங்காது.
இயங்க தெரியாது.
சாவி முடுக்க வேண்டும்.
ஒருத்தர் முடுக்கி
நீராகாரம் கொடுக்க
ஆயிரம் பொம்மைகள் ஆடும்.
நீராகாரம் தீர தெளிய
கொடுக்க வேண்டும். ஆடும்.
பொம்மைகள் ஆடாது
எல்லாப் பாடல்களுக்கும்.
குழுக்குழுவாக இருக்கும்
இவைகட்கு மற்ற குழுக்கள்
பாடல்கள் ஆகாது...
சிறுமி வன் கொலைக்கு
சில பொம்மைகள்.
ஜாதி மத கொடுமைக்கு
சில பொம்மைகள்.
அரசியல் கூத்தடிப்புக்கு
சில பொம்மைகள்.
தமிழ் பொம்மைகள்
மிக நல்ல பொம்மைகள்.
ஒரு குழு ஆடும்போது
மற்றது வேடிக்கை பார்க்கும்.
சாவி முடுக்குவோர்
தலையில் கத்தி கீறினால்
பாடல்கள் நின்று நிகழும்
பொம்மைகள் தங்களையே
கடித்து கொல்வது என்பது.
கத்தி போனபின்
பழைய இளிப்பில் திளைத்து
பொம்மைகள் ஆடும்.
நீராகார பட்சிணியான
தமிழ் பொம்மைகள்
ஒரு காலமும்
ஒன்றாக ஆடவில்லை
ஒரே பாடலுக்கு...

2018-05-08 18:32:41 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353555.html

பகலை தீர்த்த குரல்
பகல் இரைச்சல் அற்றது.
மர்மங்களை மணந்து
நிழல்களில் கூடு கட்டும்.
காண்பவர் மனதினில்
குண்டுகள் நிரப்பும்.
பகல் கசப்பின் சாந்து.
சினத்தின் புல்லரிப்பு.
நாடகங்களின் மரணம்.
சீறி வளர்ந்து நில்லாது
படரும் எவ்வொன்றிலும்
தோல் வேலிகளாய்.
பகல் யாவரின் மனம்.
பகலின் உச்சமென்பது
கோட்டையின் சிம்மாசனம்.
ரகசியங்களை அதிராது
உண்ணும் ஜீவராசி.
மாயங்கள் அற்றது.
கொதிக்கத் துவங்கி
தளர்ந்து சாய்கையில்
மிதித்து நடக்கும்
காற்றில் தடுமாறும் இசையாய்.
அறியாது கை பட்டிட
நீயிட்ட கூச்சலில்
அஞ்சி சுருண்டது பகல்.

2018-05-08 18:30:13 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353480.html

கடல் சொப்பனங்கள்
ஈரக்கையால் தொடுவாய்.
ஆங்கிலப்பட டைட்டில்
விடாமல் வாசிப்பாய்.
எறும்பு வரிசையை
தாண்டித்தான் செல்வாய்.
பஷீரை வாசித்து
கண் துளிர்க்க பார்ப்பாய்.
கேள்விகள் கேட்டு
பதில் வேண்டிய கண்கள்
ஓடும் கேள்வியின் பின்னே.
உனது வளையலோசையில்
சுவர்களும் சிரிக்கும்.
உன் கொலுசொலியின் பின்னே
அலைகின்றன அறைகள்.
ரோஸிக்கு ஊட்டுகையில்
மொட்டுக்கள் மலர்வதாய்
திறந்து மூடுவதான
உனது அதரத்தில்
கொலுவாகும் புன்சிரிப்பு.
இந்நேரம் கடந்திருக்கும்
அந்த ரயில் உன்னுடன்.
என்ன சொல்வதென
தெரியவில்லை
உன்னைத்தேடி
மலங்க மலங்க முழிக்கும்
இந்த பூனைக்குட்டிக்கு..

2018-05-07 19:43:37 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353479.html

கைதி எண் 00000
எனக்கு ஜாதி உண்டு
மதம் உண்டு.
இனம் நாடு கொடி உண்டு
பகை தேசம், பகைவர் உண்டு.
எனக்கு பெயர் உண்டு.
பலவிதத்தில் நீளமாய்
இலக்கங்கள் கூட உண்டு.
இதில் ஒன்றும் நானே
ஸ்வீகரித்ததல்ல.
சொன்னார்கள்.
சூட்டினார்கள்.
வழங்கினார்கள்.
பின் அனுப்பி வைத்தனர்.
எனது நிர்வாணம் அழகானது.
அதை மறைத்தார்கள்.
எனது காமம் நேர்மையானது
அதை சபித்தார்கள்.
எனது சிந்தனை கூரானது.
அதை மழுக்கினார்கள்.
எந்த பிழைப்புமற்ற என்னிடம்
வரிகள் பிடுங்கப்பட்டன
மானின் அடிவயிற்றில்
சிகை பிடுங்குவது போல.
வருடங்கள் செல்லச்செல்ல
சான்றிதழ் தந்தனர்
எல்லாக்கல்விக்கும்.
எல்லா அடிமைதனத்திற்கும்...
அடுக்கி வைத்தும்
துடைத்து வைத்தும்
காத்திருக்கிறேன்
மரண சான்றிதழ் பெற...

2018-05-07 19:41:01 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353418.html

அகிலா,,,என் இமை மேல்
அன்புள்ள அகிலா
உன் மடலை நான்
வாசித்தேன். பின்பும்
வாசிப்பேன். பின் எப்போதும்...
வாசிக்கையில் உன் நினைவு.
பின்பும் உன் நினைவு.
தோட்டத்தில் இருக்க
அழுகையாக வருகிறது...
வீட்டுக்குள் போய் விட்டால்
துயரமாகி விடுகிறது...
என்றெல்லாம் எழுதுகிறாய்.
என்று நீ வருவாய்
இனி பார்க்க முடியாதோ
எனவும் கேட்டிருக்கிறாய்.
நீ அலம்பும் பாத்திரத்தில்
நீ தோய்த்த ஆடைகளில்
நீ கழுவிய அறைகளில்
உன் கண்ணீரே அதிகமென்று
சுட்டிக்காட்டி உள்ளாய்.
கடித்து குதறும் இரவுகள்
முறைத்து பார்க்கும் பகல்
ஞானமற்ற தோழியின் சிரிப்பு
என்னை மரணமாக்கியது
என்றும் சொல்லியிருக்கிறாய்.
நீயற்ற இந்த வாழ்க்கை
அமிலத்தில் தோய்த்தது.
உன் பிரிவு நிரந்தரமென
சடலமாக்கும் என் கனவை
உன்னால் திருத்தமுடியும்
எனவும் அதிலிருந்தது.
வாசிக்கிறேன் அகிலா...
மீண்டும் மீண்டும் படிக்க
எனக்கு தோன்றுகிறது
இறந்தகாலம் என்பதாக
ஒன்றுமே இல்லையென.
போகட்டும்....
உன் கணவர் நலமா?
குழந்தைகளும்...

2018-05-06 19:25:52 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353409.html

லார்ட் பைரன் அடிக்குறிப்பில் இருந்து
யாரும் வரும் போகும் உலகில்
யாரோ ஒரு பெண்
யாரோ ஒரு ஆண்.
யாரும் யாரையும்
அறியாத வாழ்க்கையில்
யாரும் அறியாமல்
தம்மில் அறிந்தனர்.
அறிந்து புரிந்ததை
யாரும் அறியவில்லை.
யாருக்கு தெரியாது
யார் யார்
யாருடன் என்பதும்...
யார் என்று கேட்ட பெண்?
யார் என்று சொன்ன ஆண்!
யார் மறைந்து போனது.
யாவரும் நலமென்று
யாரும் அறியாமல்
ஆணும் பெண்ணும்
யார் என்பதை மறந்திட
தொலைந்தது மீளவியலாது
ஒரு மனதில் இரு இதயம்.
யாரும் உளறும் உலகில்
யாரோ யாரிடமோ சொல்ல
யாரோ வந்து நசுக்கினர்.
இதயத்தை நசுக்கினர்.
இன்று...
யார் அந்த பெண்
யார் அந்த ஆண்...
யாரும் யாரிடத்திலும் இல்லை..

2018-05-06 17:19:20 by Nathan5a854b1c08cea
Back to Top

Popular Tufs

The planet pays a high

The planet pays a high

my salary

my salary

boxes are the same color

boxes are the same color

India is not full of

India is not full of

eluthu.com Links

eluthu.com links are listed here.