eluthu.com/kavithai/353399.html

பிடி சோற்றில் போர்
அஃறிணைகள் அவைகள்.
துன்புற்ற சாயல்களில்
வற்றாத பொருக்குகள்
என்பதன் மாற்றவியலா
நீள்வெட்டு சாட்சிகள்.
அலைகின்றன..
சாலைகளில் அவையும்
அவைகளில் சாலையும்.
மரணம் நிகர்த்த துயிலில்
சாலைகளின் ரௌத்திரம்
கனவுகளில் எறிகின்றன
கால் முறிக்கும் கற்களை.
உடன் திடுக்கிட்ட இரவை
கவ்வும் ஊளையில்
சிதறி சரியும் ஜாமம்.
கூச்சப்பகலில் சினமுற்ற
வெறியின் சாவாப்பசி
விடைகள் நொறுங்க
வேட்டைகளில் சிலிர்க்கும்.
உயிர்களின் ஓலமும்
உடலின் மயிர்களும்
பல்லிடுக்கில் சிக்கிக்கிழிய
பசியில் தணல் சுடர
நகைப்பை மறந்து
நாளொரு தினமும்
வேட்டையின் குரூரம்.
அஃறிணைகள்....
ஆடுவதில்லை நரவேட்டை..

2018-05-06 13:34:19 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353345.html

காதலின் கறுப்பு சொத்து
காத்திருத்தலில் அறிவாயா அன்பின் கூவலை?

நின்றுகொண்டிருக்கும்
எனது நேரங்களும்
நினைவற்று சரிந்தது.

காலங்களை ஒடித்து ஒடித்து
புற்களில் எறிகின்றேன்.

அவையும் திக்கறிந்து ஒட்டிக்கொள்கின்றன
உன்னிடம் ஓடிவந்து...
எங்குதான் இருக்கிறாய்?
உன்னை தவிர்த்து விட்ட
உன் மனம் என்னெதிரில்
கூலாங்கற்களில்
விளையாடுகின்றன.
நானும் தொலைபேசியும்
முறைத்துக்கொண்டிருக்கிறோம்

அறிவற்ற பொழுதில்
பொழுதும்போகாமல்...
அறியமுடிந்ததெல்லாம் ஒன்றுதான்...

காலம் மறுக்கும் இப்பொழுதில் இனி
ஆவியாகும் உன் கண்ணீரென...

2018-05-05 20:53:46 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353289.html

விஞ்சிய கவிஞனின் பேனா
பேச்சற்றும் மூச்சற்றும்
போனதும் அந்த பேனா
ஒளிவட்டம் தயாரித்தது.
வண்ணங்கள் சேர்த்து
வரிவரியாய் வரைந்தது.
ஒருவழியாய் முடிந்ததும்
தலையின் பின் சூடியது.
ஒளிவட்டம் உக்கிரம்...
தீமையை அறுக்கும்.
அசுரர் குடி ஒழிக்கும்.
வழிபடும் உன்னதம்.
ஒளிவட்டம் நாளடைவில்
தானும் சுற்றி
தன்னையும் சுற்றியது
வேகம் என்பதில்
வெகு வேகமாக...
பேனாவின் நம்பிக்கை
கனவிலும் நினைவிலும்
நவில இயலாத நினைவிலி
கற்பனைக்கு தீனி இறைத்தன
காலப்போக்கில்
ஈக்களும் கொசுக்களும்
குடியேறும்வரை...

2018-05-05 14:32:59 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353242.html

நகரம் ஒரு வனத்தின் முத்தம்
நீ நகரம்
அதில்தான் இருக்கிறது
உனக்குள் பெய்த காடு.
திக்குகள் மொக்கவிழ்க்க
நான் ஒழுங்கற்று
கண்டும் கவியற்று
சுற்றும் மின்மினி.
உன் ஸ்வப்னங்கள்
இரவில் பரவும் மின்னல்.
நான் ஒலித்த இடியில்
வழித்த முழக்கத்தின் கரு.
கண்களில் குளிர் நிரம்ப
காதலை பூக்க வைத்தாய்...
பருவங்கள் நிறம் சிலிர்க்க
உன் காடு மலர்ந்தது
மகரந்தப்புயலில்...
நான் வேர்களில்
ஒதுங்கும் அருவியின் வியர்வை.
நீ நகங்களில் ஏந்தினாய்
என் பாலையை...
உன் ஸ்வாசத்தில் கடைந்த
வாசனை தென்றல்
எரித்தன மழலைச்சூட்டில்
பாலைநிலத்தை பிணி அகல
சாம்பலற்று வீழ்கிறேன்
நான் ஃபீனிக்ஸின்
முதல் கூவலின் ஸ்வரமாய்...
நீ காடு.
நீ உண்ட விண் நான்.
நம்மை பிணைத்தது
காதலில் தளிர்த்த வானவில்.
ஒளிரட்டும் சகியே...
அலம்பிய புத்தகமாய்
நம்மிரு வாழ்க்கையும்
தந்தத்துப்பாதையில்
வண்ணங்களாய் பாய்ந்திட...

2018-05-04 19:49:59 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353226.html

ரோமர் தைத்த ஈட்டி
நாணங்களை துளைத்து
சதங்களை தாண்டி சென்றது
அச்ச உருண்டைகள்...
பார்ப்பவர் கண்களில்
இனி அது தென்படும்.
இமைகள் கவிழ்ந்தால்
காத்திருந்தது போல்
ஈட்டியாய் குத்துகின்றன
கண்களின் வழி மனதை.
மூடிகள் இதற்கு இல்லை.
இருப்பினும் மூட முடியுமா?
கைகள் மறைக்க
துடித்து பாய்கின்றன
காற்று வந்து கிளற...
காற்றில்தான் அது
கூர் தீட்டும் போலும்!
காற்றில் சிரித்தது.
இருள் வந்தால் போதும்
நிம்மதிதான் எனக்கு
எவருக்கும் தெரியாது.
இப்படி வளருமென்று
யூகிக்க தெரியவில்லை...
பிறர் பார்க்க பார்க்க
மனமெங்கும் இடையறா
கொசுவின் ரீங்கரிப்பு...
நாளை விடியட்டும்
வேண்டாம் இனிமேல்
வெட்டி விடுவோம்...
ஆசையுடன் ஒருமுறை
தடவிப்பார்த்தேன்
மீசையின் நீள் முடியை.

2018-05-04 15:46:23 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353172.html

சில மௌனங்களில் சில சொற்கள்
உன் மௌனத்துடன்
காற்றில் பதங்கமுறும்
புன்னகை...
அது தெரியும்.
எழுதிய புதினத்தை
ஓயாது மனனம்
செய்யும் மனதில்
மோதி மோதி
ஓடும் அலையென்று.
திட்டங்கள் இன்றி
புன்னகையினூடே
தலை கவிழ்வாயே...
சிரபுஞ்சி சாரலாய்
தெறிக்கச்செய்து
நொடிகளை புரட்டும்
விசைமுள் கூட
நாணத்தில் நழுவுமென
கணிக்க கொண்டாயோ?
நீராவியாய் நான் திரிய
எனக்கென்று இருக்கும்
மந்திரப்புன்முறுவலில்
நீயே நெசவுகிறாய்
காதலின் தோகைகளை.
என் கை பற்றுகையில்
கண்பற்றிய கணத்தில்
உச்சரிக்க உச்சரிக்க
ஈரமற்று உலர்ந்த
சொற்கள் எவ்வொன்றும்
ஸ்வர்க்கத்தில் ஒளிரிட்ட
வளியோடு கலவிய
வெண் இதழ்களாக...
நமதில் உன் உரையாடல்கள்.

2018-05-03 22:05:43 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353168.html

சந்தைக்கு வந்த உறவுகள்
தாத்தா பாட்டி
சித்தி சித்தப்பா
மாமா அத்தை
கொழுந்தன்
நாத்தனார்
அண்ணா மன்னி
அப்பா அம்மா
என்று அவர் உறவு.
அப்பா அம்மா
பெரியப்பா அண்ணன்
என்றெல்லாம்
அவர் மகன் கால உறவு.
அப்பா அம்மா
என்றும் முடிந்த
அவரின் மகன் உறவில்
பிறந்த குழந்தைக்கு
உறவானதெல்லாம்
கம்ப்யூட்டர்
லேப்டாப் ஐபோட்
மொபைல் மற்றும்
ஆங்கிரி பேர்ட்ஸும்
டிவி போகோவும்...
அந்த மகன்
முடிவு செய்தான்
பிள்ளை எனவொன்று
தனக்கு வேண்டாம்.
எதற்கு இனி
இந்திய சந்தையில்
இன்னொரு கச்சாபொருள்..

2018-05-03 21:28:39 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353071.html

பெறுநர் கார்த்தி பிரான்ஸ்
நண்ப...
பொய்த்தது நம் நட்பு.
பாதைகள் எங்கும்
உளறி உளறி
அழும் அந்த அன்பில்
அமிலம் தெறிக்க
நீ விரைந்து சென்றாய்.
மடக்கென்று விழும்
இந்தக் கண்ணீர்தான்
இம்முறை துடைக்க
நீயின்றி உறைந்து
சிதறியது குறுதிப்பொறுக்காய்.
நீ துடைத்து வைத்த
அறிவில் நீயே
நெருப்பும் வைத்தாய்.
பொசுங்கி போகிறது
கடந்த காலத்தில் நீ
தலை வைத்த மடி.
சுட்டிக்காட்டிய காட்சிகள்
பெயர்ந்து சரிகின்றன
உன் தப்படிகளில்
மிதிபட்டு நொறுங்கும்
என் இதயத்தில்...
வெளிச்சங்கள் ஏறாத
முன்காலை வரையிலும்
பார்த்து பார்த்து பேசிய
புத்தகங்களின் அட்டைகள்
உன்னை கேட்டால்
நான் என்ன சொல்ல?
கத்தி நுனியில்
கனி செருக அஞ்சும்
உன் மனதில் இனி
நான் எங்கிருப்பேன்?

2018-05-02 19:35:22 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/353054.html

தூக்கமாகவனம்
எழுதிய அசதியில்
உறங்கிப்போனேன்
தாளின் மீதே...
எவரோ கசக்கி எறிய
சிக்கிக்கொண்டேன்.
கோணல் கோணலாய்
புதிர் விடுத்த புதிராய்
தாளின் பாதைகள்
நீண்டு முடிந்து நீண்டன.
சொற்கள் ஒளிர்ந்து
உயிர் கிளம்பி ஓடின.
முன் வரியில் நின்றவை
பின் வரியில் தாவின.
ஒன்றன் அர்த்தம்
வேறொன்றில் செருகின.
பிடித்தும் இழுத்தும்
வரிசைப்படுத்த முயன்றும்
நிற்பது போல் நின்று
கால் வழி புகுந்து
முன் நின்ற சொற்களை
கடித்து விரட்டின.
எழுதிய கவிதை
தன்னைப்பிளந்தும்
தனக்குள் பரவியும்
எழுதிக்கொண்டே இருந்தது.
விழித்துப்பார்க்கையில்
கவிதையின் கனவில்
நான் உறங்கியிருந்தேன்.

2018-05-02 18:36:44 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/347641.html

அன்பு நண்பா
உன் எள் நுனி வாழ்க்கை
இன்னும் உலரவில்லை
காற்றை பிளக்கும்
உளியென அலைகிறாய்.
மிஞ்சிய மரணத்துடன்
கசங்கிய பாதையில்
கனவொன்றை
புதைத்து மீள்கிறேன்.
உன் அவகாசங்களில்
யாழ் எடுக்க மறந்தால்
உன் நிழல் நகராத
ஒரு நிலத்தில்
உற்று பார் நண்ப...
என் கனவு சொல்லும்
நம்மை தட்டிப்பிரித்த
கால விரிசல்களை...
இரு...
பழுதுண்ட என் கனவு
இனி நீ பற்றிச்செல்...
பூக்கள் உன்னையும்
புரிந்துகொள்ளும்.

2018-05-02 12:01:15 by Nathan5a854b1c08cea
Back to Top

Popular Tufs

Kejriwal

Kejriwal

Nice quote

Nice quote

Jayalalithaas Death  Central Government

Jayalalithaas Death Central Government

Touching lines

Touching lines

eluthu.com Links

eluthu.com links are listed here.