eluthu.com/kavithai/352303.html

சைக்கிள் பையனும் ஒரு காதலும்
அன்று அமர்ந்து பேசியது
உதிரம் குடித்த
விஷபுற்கள் மீது போலும்.
நமது பிரிவு என்பது
அங்கு தொடங்கியது.
வழக்கமான காரணங்களே...
அம்மா,அப்பா..
மணமுடிக்கா அக்கா...
மனமோ மூடக்குளவியாய்
சுற்றி அலைந்தது
காதல் நினைவுகளில்...
ஓய்வின்றி உரைத்தாய்
பிரிதலின் நியாயத்தில்
புரிதலை உருவாக்க...
உன் வாக்கியங்கள்
எங்குமே முற்றுப்பெறவில்லை
முட்டி மோதியும்
குழம்பி தெறித்தும்
விழுந்து எழுந்து
உடைந்து உடைந்து
நொறுங்கி கொண்டிருந்தது
சைக்கிள் பழகும் சிறுவனோடு.
உன் எந்தப்பார்வைக்கும்
அர்த்தம் தெரியாத எனக்கு
இனி என்ன என கேட்கும்
இந்தப்பார்வையை
புரிந்து கொண்டேன்.
சைக்கிள் பையன் போக
நீயும் செல்கிறாய்.
உன் பின்னே வருகிறது
என் காதல்
வழி தவறிய கோழிக்குஞ்சாய்...

2018-04-19 19:55:33 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/352202.html

நான்ஆர்யன்

வீட்டுக்கு அடிக்கடி
வரும் ரசூல் பின்னர்
வீட்டு மாடியிலேயே
தையல் கடையை
போட்டுக்கொண்டார்
வாடகை எதுவுமின்றி.
அம்மா சொன்னாள்
அது தாத்தா என்று...
அப்போது 3 வயதிருக்கும்.
சினிமா எப்போதும்
எங்களுக்கு ஓசிதான்.
சூரியநாராயண தியேட்டரில்...
அங்கு போனால்
தேவர் உட்கார்ந்து இருப்பார்
ஐஸ்க்ரீம் தருவார்.
நடிகர் S.S.R ன் அப்பா
என்று சொல்வார்கள்.
யாருக்கு வேண்டும் அது...
ஐஸ்க்ரீம் தாத்தாதான் அவர்...
அப்போது வயது 7 ஆகும்.
ஒந்தாயி தினமும்
தப்பாமல் வருவாள்...
பத்து பாத்திரம் தேய்க்க
ஊருக்கு வெளிய
ரொம்ப தூரம் தள்ளி வாறேன்
என்றபடி போகும்போது
பாட்டிக்கு காபி கொடு
போவென்று விரட்டும் என் பாட்டி
வயது 12 இருக்கும்.
போய் சேர்ந்தார்கள்.
சேர்ந்தவர் நினைவுகள்
குளத்து கூழாங்கல்லாய்
துருமறு எதுவுமின்றி
அப்படியே இருக்கிறது.
பூணூல் போட்டனர் எனக்கு.
வயது 14 இருக்கும்.
ரசூல் பொண்ணு
ஜெரினா இன்றும் வருகிறாள்.
தேவரின் பேரர்கள்
இன்றும் வருகின்றனர்.
ஒந்தாயி பேத்தி
கயல்விழி இன்றும் வருகிறாள்.
பேசுகிறோம். சிரிக்கிறோம்.
எனது பூணூல் எப்போதும்
அவர்களை உறுத்தவே இல்லை.
நீ மட்டும் ஏன்
என்னை ஆர்யன் என்கிறாய்?
என்னில் இல்லாத ஜாதியை
எனக்கு ஏன் கற்பிக்கிறாய்?
உன் ஆவல் அதுவானால்
ஆம்...நான் ஆர்யன்.
திமிர்கொண்ட தினவு கொண்ட
ஆர்யன் நானே...

2018-04-17 20:02:18 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/352134.html

எனது செருப்பை திருடுபவன்
தினமும் தொலைகிறது
என் காலணியில் ஒன்று.
இரவில் இருப்பது
காலையில் இருக்காது.
ஆச்சர்யம் மெதுவாக
அதிர்ச்சி கொண்டது..
ஏன் தொலைகிறது
காலணிகள்...
வீட்டில் எவரும்
இதுபற்றி அறியவில்லை.
புதிது புதிதாக
வாங்க வாங்க
தொலைந்தது தினமும்.
இன்றிரவு திட்டமிட்டு
கண்டுபிடிக்க முனைந்தேன்.
இருளில் சற்று தள்ளி
ஒரு ஓரமாய்
அமர்ந்தேன் தனியாக
கையில் ஒரு குச்சி...
அதுதான் என் ஆயுதம்.
அப்பா என்னை அடிக்க
வைத்திருந்தது...
அவர் அப்பா என் அப்பாவை
அடித்த பெருமையும் உண்டு.
தலைமுறை சொத்து...
ஒன்றும் ஆகவில்லை
நேரம் போனது மிச்சம்.
திடுமென செருப்பு
தானே நகர்ந்தது.
மெல்ல ஊர்ந்தது.
உற்றுப்பார்க்க
ஒரு எறும்பு இழுத்தது.
பார்க்க பார்க்க
செருப்பு மறைந்து போனது.
எறும்பும் கூட....
இனி காலணி வேண்டாம்
என்ற முடிவு செய்தேன்.
வேறு வழியுமில்லை...
நாட்கள் போயின...
ஒருநாள் காலையில்
தொலைந்த காலணிகள்
அனைத்தும் இருந்தன.
அதன்மீது சடலமாய்
அந்த எறும்பும்...
ஒருபோதும் ஆகாது
காலணி என் பாவங்களாக.
எறும்பு ஒரு இறைவனாக.
ஒருவேளை ஆகிவிட்டால்...
இப்பொழுதெல்லாம்
நான்
காலணி அணிவதில்லை.

2018-04-16 19:49:43 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/347947.html

பழைய ரணம்
நாம் மாறிவிட்டோம்...
பொத்தான்களாக
நான் உன்னை
அழுத்த_நீ என்னை அழுத்த...
நம்மை அவன் அழுத்த
விரலும் பலகையுமாய்
மின்சார மிச்சங்கள்...
நண்ப...
நினைவுறுத்தி சொல்...
கடைசியாய் எப்போது
மிதித்தாய் உன்
தொழுவத்து மாட்டு சாணம்...

2018-04-15 21:06:47 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/347964.html

குரல்
ஒலித்தல் என்று
மாறிப்போனேன்...
நினைவுச்சவ்வுகள்
சொற்களின் நிறம்
கொண்டு
காலங்களை தொகுத்தன.
விடுபட்ட குரல்கள்
சப்தம் கௌவி வனதிசை
நோக்கி புரண்டன.
மெய்மையின் கூற்றுக்கள் பிளந்து
ஞானக்கூச்சலாய்
உயிரில் கவிந்தன.
மர்மத்தின் கூக்குரல்
தேசமெங்கும் ஊடுருவ
சித்தம் பற்றினேன்
உன் ஒருவனுக்காக...

2018-04-15 21:06:05 by Nathan5a854b1c08cea

வந்தனா புனே மஹாராஷ்டிரா - காதல் கவிதை eluthu.com

eluthu.com/kavithai/352036.html

வந்தனா புனே மஹாராஷ்டிரா
வக்த் பி தெஹ்ரா ஹே
கெய்சே க்யோன் யே ஹுவா
காஷ் து எய்ஸ்செ ஆயே
ஜய்சே கோய் துஆ
து ரூஹ் கி ராஹத் ஹே
து மேரி இபாதத் ஹே....
ஸ்ரேயா பாடப்பாட
அவளும் நானும்
ஒருவர் விழியை ஒருவர்
துடைத்த நாட்கள்....
நீ பிரிந்தாய்...வந்தனா...
தனித்தவன் என்னுள்ளும்
தனித்து சிதைந்தேன்.
நீண்ட வாழ்க்கையில்
ஒரு புள்ளி தவறியதால்
கோலம் திருகி கொண்டது.
அவர் நினைவு வந்தது.
அன்றே சந்தித்தேன்.
கண்ணாடி குடுவை
ஒன்று தந்தார்...
வெறும் குடுவை. நீயும்
அப்படியே வைத்திரு என்றார்.
கிளம்பி வந்தேன் அறைக்கு.
பகல். நடுப்பகல்.
மங்கிய வெளிச்சம் அறையில்.
முன் வைத்து அமர்ந்தேன்.
குடுவை இருந்தது.
நேரம் கடந்தது.
ஒரு ஈ மேலே பறந்தது.
இரு எறும்புகள் சுற்றின.
வேறு இல்லை.
அவர் வந்தார்.
வெறும் குடுவை பார்த்தார்.
கண்ணை மூடிக்கொள்...
மூடினேன். தெரிந்தது.
வெறும் குடுவை அல்ல.
காற்று இருந்தது.
காற்று அசைய ஈரம்.
ஈரம்...மேகம்.மழை வர
வனம்.உயிரினம்.
பிரபஞ்சம். வாழ்க்கை.
குடுவையில் என் மனம்
மிதக்க...மனதில்
குடுவை மிதந்தது.
நான்,நீ,அவன்,அவள்,அது.
கோபம், வன்மம், இரக்கம்.
தொடல்,பார்த்தல், காதல்.
காதல்.நான்.அவள்.
மேரே ரஸ்க்கே கமர் துனே பெஹ்லி நசர்
ஜப் நசர் சே மீளெய் மஜா அஅகயா...
சோனு கக்கர் பாடப்பாட
அவள் என் கண்ணை
துடைக்கின்றாள்.
சட்டென விழித்தேன்.
இருந்தது எதுவும் இல்லை.
அறையில் இருந்த என்னில்
அறை இருந்தது என்னுள்.
காதல் என்பது பிரபஞ்சம்.
பெண் ஒரு சாதனம்.
வந்தவர் போய் விட்டார்.
நழுவி விழுந்தது அறை
என்னிடமிருந்து.

2018-04-15 13:26:06 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/352027.html

தலைப்பை கவிதையில் தேடவும்
மனம் சலித்தது.
துயரம் கொண்டேன்.
யாதொரு பலனுமின்றி
நாட்கள் கழிகின்றன.
ஒவ்வொரு நாளும் நீ
பாத்திரங்களை உடைக்கிறாய்.
புதிய பாத்திரங்கள் செய்ய
எனக்கு கடினமாகிறது.
மீசை வளர்ந்தபோது
உனக்கு பிடிக்கவில்லை
பாத்திரம் உடைத்தாய்.
கடல் அருகே வீடு
பார்த்தபோதும் நீ
பாத்திரம் உடைத்தாய்.
அசைவம் பிடிக்காது என்பதும்
சாப்பிட தெரியாது என்பதும்
வேறு வேறானவை என்றேன்.
மறுபடி உடைந்தது.
நாற்காலி சிலசமயம்
என்னிடம் பேசுவதுண்டு.
அப்பா அதில்தான்
அபானவாயு கழிக்கையில்
உயிர் பிரிந்தது.
பேசப்பேச உடைத்தாய்.
இனி பாத்திரம்
எதுவும் என்னிடமில்லை.
வாயற்ற உன் கோபங்கள்
என் மென்மையில்
கூர்தீட்டி உன்னை
ஏவி விடுகின்றன எட்டாத
என் பாதாளத்தில் இருக்கும்
உள்ளெங்கும் இருள் குடித்த
அண்டாவின் விலா ஓடிக்க...
நீயும் ஒடுகிறாய் உன்
மனதினை மீறியும் என்
சமிக்ஞைகள் எதிர்த்தும்...
இருள் உன்னை விழுங்கும்.
அப்போதும் நீ
வெளியேறும் பாதை என்பது
துக்கத்தில் ஓய்ந்த இந்த
நாற்காலி தன்னைமறந்து
தும்மும்போது மட்டுமே.

2018-04-15 11:04:26 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/351812.html

காகிதம் அருந்திய கனவின் குருதி
நெகிழ்ந்த துயிலின் கரையில்
உருப்புரியா ஒருதுளி கனவின்
நினைவினில் என் மனம்.

காற்றினுள் நிலவிய ஈரமாய்
விழியினில் தேங்கிய நீர்
நிற்பதறியாது வழிந்து சுட்டது
இதயத்தில் நீ செழித்த நாட்களை.

உன் முகம் தெரிந்ததோ கனவில்…

பிரார்த்தனையின் வாசனையாய்
வாழ்ந்திருந்த காலத்தின்
லஹரி தொடர்ந்துவரினும்
நீயற்ற என் வீட்டில் இருப்பதோ
நாகசீறலின் வலியூட்டும்அச்சங்களே.

சாலைமர நிழல்களும் இசையும்
வாய்த்த புத்தகங்களின் சகபகிர்வில்
திருமணத்தில் ஒருவரான நம்மை
அன்றொரு அறையில் சிலரின்
காகிதமும் குச்சிப்பேனாவும்
ரத்தென்று சொல்லி விட்டன.

உயிரின் மீது உலைகள்
தாவி நின்று கொதிக்கின்றது.

அசையாது கிடக்கின்றேன்
வெண்ணிற பருத்திப்படுக்கையில்…

கொலையுறும் மழலை போல்
விபரமற்று துடிக்கும் மனதுக்கு
தெரியவேயில்லை…
கண்ட கனவில் உன் முகமும்
உன் உடையும் உன் சூடும்…

எழமுடியாது தவிக்கும்
சுடப்பட்ட குதிரையென
துணை நீங்கிய மனம்
தனித்துத்துடிக்கிறது விரிப்பினில்…

நகங்களில் சிக்கிக்கொண்டு
வீறிட்டு அழும் அந்த கனவை
என் செய்ய என் தோழியே?

நன்றி
வணக்கம் லண்டன்
இணைய இதழ்..

2018-04-12 11:21:53 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/351755.html

அந்திச் சூரியனாய்
குளிரச் சிரித்த
திண் தமிழன்...
பசித்து போனான்.
ஆவல் பசித்தது
மனம் பசித்தது.
பார்த்தது எல்லாம்
அவனுக்கு பசித்தது.
காமம் பசித்தது.
கனவுகள் பசித்தது.
பசிக்க பசிக்க
புசிக்க தவித்தவனின்
வெறி பசித்தது
ஆணவம் பசித்தது.
நாணம் மறந்து
கோணல் ஆனான்.
அறிவதில் பசித்த
கேட்பதில் பசித்த
தெளிவதில் பசித்த
பச்சை தமிழன்
போதையில் பசித்தான்.
பசித்தவன் ஆவி
கோடைத்தணலாய்
குமுறித்தவிக்க
வாக்களித்து
வாக்களித்து
பசிக்கும் தமிழனை
செரித்தது மரணம்.

2018-04-11 18:01:17 by Nathan5a854b1c08cea

eluthu.com/kavithai/351728.html

தமிழ் அமைப்புகளே
விட்டுவிடுங்கள்...
உமது போர்குணத்தில்
நீராவியாவது எதுமறியா
எங்களின் செல்ல
விசிலடிச்சான் குஞ்சுகளே...
பாவம் அவர்கள்
வீர வசனங்கள் கேட்டு
தினவு கொண்ட தோளுடன்
வீதியில் திரிகின்றனர்.
கோப்பையும் கொள்கையுமாய்..
வீட்டில் ஒட்டடை
அடிக்க ஆள் இல்லை.
வசனம் கேட்டு கேட்டு
நாங்கள்
வாழ்ந்து கேட்டது போதாதா?
ஊருக்கு நான்கு பேர்(?)
இருக்கும் நீங்கள்
ஊதி விடும்
கற்பனை பயங்கரத்தில்
ஓடி ஓடி அலைகின்றனர்
வாழ்வும் வக்குமின்றி...
கோமணத்தில் இருந்து
பாண்ட்க்கு மாறவே
ஓடிபோனது 70 வருடம்.
போகும் போக்கில்
கோமணமாவது மிஞ்சட்டும்.
உங்கள் ஆசைக்கு
சொல்லி விடுகிறோம்
பாஸ்...நாங்க
பயந்துட்டோம்
உங்களை பார்த்து
போதுமா???????????
விட்டுவிடுங்கள்
எம் தமிழர்களை...
நேற்று வந்த
உங்களை நம்பியல்ல...
தமிழ் தானே பிழைக்கும்.
நாங்கள் எப்படியும்
பிழைத்துக்கொள்வோம்
அயலகம் சென்று
ஆவி சிந்தி வாழ்ந்து
பூமி வியந்த
பெருமை எமக்குரியது
உன் தாத்தன்
பிறக்கும் முன்பே.

2018-04-11 11:59:18 by Nathan5a854b1c08cea
Back to Top

Popular Tufs

MI 1205 150

MI 1205 150

default thumb image

Celebrations at Congress HQ after

Mountain sleepers hanging on a

Mountain sleepers hanging on a

Ha ha ha

Ha ha ha

eluthu.com Links

eluthu.com links are listed here.